மீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா


மீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா
x
தினத்தந்தி 7 May 2018 5:03 AM IST (Updated: 7 May 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

மீனம்பாக்கத்தில் பராமரிப்பின்றி இருக்கும் குளத்துமேடு பகுதியில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு பகுதிக்கு உட்பட்ட மீனம்பாக் கம் ரெயில் நிலையம் அருகே குளத்துமேடு பகுதியில் கருமாரி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதி ராணுவத்துக்கு சொந்தமானது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 300-க்கும் அதிகமானவர்கள் இந்த பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். ராணுவத்துக்கு சொந்தமான பகுதி என்பதால் இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யமுடியாமல் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் உள்ளது.

எனினும் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில பணிகளை செய்து வருகிறது. அதன்படி கடந்த 30 ஆண்டுகளாக கழிப்பிட வசதி இல்லாமல் இருந்து வந்த இந்த பகுதியில் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடங்களை கட்டி கொடுத்து உள்ளது.

இங்குள்ள குடியிருப்புகள் அருகில் பழமையான பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. ஆனால் இந்த குளம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இன்றி உள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள், செடிகள் வளர்ந்து உள்ளன.

குளத்தை சுற்றிலும் கரு வேலமரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் மழை காலங்களில் இந்த குளத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

சென்னை முழுவதும் தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளதால், இந்த குளத்தை கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் மூலமாக முறையாக சீரமைத்து, குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை சுற்றிலும் நடைபாதைகள் அமைக்கவும், மரங்கள், செடிகள் அமைத்து பூங்கா போல் ஏற்படுத்தி பராமரிக்க ராணுவ அதிகாரிகள் உரிய அனுமதி வழங்கிட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story