பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்தவர் கைது


பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்தவர் கைது
x
தினத்தந்தி 6 May 2018 11:50 PM GMT (Updated: 6 May 2018 11:50 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்தவரை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 45). இவர் நேற்று வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரது அருகே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து நின்றது.

அதில் 2 நபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றார். அப்போது மல்லிகா திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

இதைபார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்களில் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள் மூலம் வழிப்பறி கொள்ளையர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மட்டும் பிடிபட்டார். பின்னால் அமர்ந்தவாறு தங்கச்சங்கிலியை பறித்து சென்ற நபர், தப்பி ஓடி விட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபரை பிடித்து பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், கும்மிடிப்பூண்டி கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியுடன் தப்பி சென்ற மற்றொரு நபரான கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை யை சேர்ந்த சலீம்பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story