கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து 30 கைக்கெடிகாரங்கள் திருட்டு


கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து 30 கைக்கெடிகாரங்கள் திருட்டு
x
தினத்தந்தி 7 May 2018 12:16 AM GMT (Updated: 7 May 2018 12:16 AM GMT)

கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து 30 கைக்கெடிகாரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோடு ஸ்டேட் வங்கி காலனி எதிரே ஆறுமுகம் (வயது 55) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் அவர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சிஅடைந்த ஆறுமுகம் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது ஒரு பையில் வைக்கப்பட்டு இருந்த கோலப்பொடி தரையில் கொட்டப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 30 கைக்கெடிகாரங்களை மர்ம நபர்கள் கோலப்பொடி வைத்திருந்த பையில் வைத்து திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். திருடப்பட்ட கைக்கெடிகாரங்களின் மதிப்பு சுமார் ரூ.6 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கோவில்பட்டி கடலையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கடலையூர் பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசனின் ஓட்டலில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரத்து 600-யை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், முன்னாள் நகரசபை கவுன்சிலர் சுரேஷ் நடத்தி வரும் எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டையும், அதன் மாடியில் இயங்கி வந்த அலுவலக பூட்டையும் உடைத்து ரூ.6 ஆயிரத்து 600 திருடப்பட்டது. அதேபோல் கடந்த வாரம் டாஸ்மாக் பாரில் ரூ.1000, குளிர்பான கடை, மீன்கடைகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தற்போது பேன்சி கடையில் கைக்கெடிகாரங்கள் திருட்டு நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story