கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியை கண்டித்து பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
காயரம்பேடு நகர கடன் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள காயரம்பேடு நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் பா.ம.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ் உள்பட 3 பேர் கடந்த 30-ந் தேதி மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இவர்களின் பெயர் இடம்பெறவில்லை. இவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் எந்தவிதமான காரணமும் இன்றி பா.ம.க. வினர் மனுக்களை நிராகரித்த காயரம்பேடு நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரி, காட்டாங்கொளத்தூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா ஆகியோரை கண்டித்து நேற்று காலை காயரம்பேடு நகர கடன் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணேசமூர்த்தி, மாநில துணை அமைப்பு செயலாளர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி இன்றி சாலையில் ஏன் பந்தல் அமைத்தீர்கள்? என்று கேட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காயரம்பேடு நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் யுவராஜியிடம் பா.ம.க.வினர் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story