மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கக் கோரி நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு


மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கக் கோரி நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தொழில் செய்ய மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

இதில் பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மொத்தம் பெறப்பட்ட 523 மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக அலுவலக நுழைவு வாயில் அருகில் அமர்ந்து இருந்த போளூரை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறு தொழில் செய்ய கடனுதவி கேட்டு மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

செங்கம் தாலுகா துக்காப்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், “நாங்கள் துக்காப்பேட்டை காலனியில் நிலையாக வசித்து வருகிறோம். ஊசி, பாசி, மணித் தொழில் செய்து வருகிறோம். விழாக் காலங்களில் வெளியூருக்கு சென்று தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு வேறு எந்த நிதி ஆதாரமும் இல்லை. எனவே, மானியத்துடன் அரசு திட்ட கடன் வழங்கும் படி மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

கீழ்பென்னாத்தூர் தாலுகா அவலூர்பேட்டை சாலை கண்ணகி நகரை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், “நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களது இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் இலவச வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 820 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும், காது கேளாத 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 40 மதிப்பிலான காதொலி கருவிகளையும், 2 பேருக்கு காதுக்கு பின்னால் பொருத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளையும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். மேலும் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கார்னர் ஷீட் உள்பட மொத்தம் ரூ.34 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு அலுவலர் பானுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story