மகன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரால் பரபரப்பு


மகன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

மகன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள், மண்எண்ணெய், டீசல், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களுடன் யாராவது வருகிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில், அலுவலகத்தில் கலெக்டர் கார் நின்ற இடத்திற்கு முன்பாக மண்மங்கலம் தாலுகா கிழக்கு ஆண்டாங்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த சிவக்குமார்-சரஸ்வதி தம்பதியினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கரூர் டவுன் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதைக்கண்டதும் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் ஓடிச்சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த தம்பதியினர் கதறி அழுதவாறு போலீசாரிடம் கூறியதாவது:-

எங்களது மகன் சரவணன் ஆண்டாங்கோவில் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தான். அந்த பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் எனது மகனை தனிமைப்படுத்தி சாதிபெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் எனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். அதற்கு கலெக்டர் அன்பழகன், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என கூறினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story