இரு வேறு விபத்துக்களில் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலி


இரு வேறு விபத்துக்களில் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 May 2018 3:30 AM IST (Updated: 8 May 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்த இரு வேறு விபத்துக்களில் அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி முத்துப்பிள்ளை (வயது 49). இவர் பசுமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு புறப்பட்ட முத்துப்பிள்ளை, வழக்கமாக செல்லும் பஸ் சென்றுவிட்டதால், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தங்கவேலுடன், பின் சீட்டில் உட்கார்ந்து வேலைக்கு சென்றார். தனக்கன்குளம் பிரிவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது, திருமங்கலத்தில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் 2 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். தங்கவேல் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சிவா (27). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் இருந்து நகருக்குள் செல்லுவதற்காக வெயிலு உகந்த அம்மன் கோவில் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சிவா மீது மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த மதுரை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story