மக்கள் பா.ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேச்சு


மக்கள் பா.ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேச்சு
x
தினத்தந்தி 8 May 2018 4:40 AM IST (Updated: 8 May 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மக்கள் பா.ஜனதா கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

குடகு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் குடகு மாவட்டம் மடிகேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அப்பச்சு ரஞ்சனை ஆதரித்து நேற்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மடிகேரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஸ்மிரிதி இரானி பேசியதாவது.

ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. சின்ன பையனான அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவுக்கு கூடுதல் கவுரவம் கிடைத்துள்ளது. மோடி செய்துள்ள நல்ல பணிகளால், இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து வருகிறது.

கர்நாடகத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. மத்திய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம், மாநில அரசின் திட்டங்கள் என காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

ராகுல்காந்தி போட்டியிட்ட அமோதி தொகுதியில் வளர்ச்சி பணிகளை மோடி செய்துள்ளார். மோடியின் கரங்களை பலப்படுத்த மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட வேண்டும். காங்கிரஸ் கட்சியால் நாடு பின்னோக்கி சென்றது. தற்போது மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story