கவிதை பாடும் காவிய பெண்கள்!


கவிதை பாடும் காவிய பெண்கள்!
x
தினத்தந்தி 8 May 2018 5:01 PM IST (Updated: 8 May 2018 5:01 PM IST)
t-max-icont-min-icon

பெண் என்பது இனிமையான சொல். தென்றலாய் வந்து உடலை தழுவிக்கொள்ளும் சொல். தாய்மையை தாலாட்டும் சொல்.

பெண் பல விதத்தில் ஆணைவிட சிறந்தவள். தன்னலம் பற்றே இல்லாது, பொறுமையாக, அன்பாக, தாயாக, தியாகியாக, கொடையாளியாக, மற்றவர்களுக்காக வருந்துவதற்கு பெண்ணுடன் ஆண் ஒருபோதும் சமமாக மாட்டான் என்றார், லாலா லஜபதிராய்.

சீரும் சிறப்புமிக்க நம் செந்தமிழ் நாட்டிலே வடவர் வரவால், அவர் தம் செல்வாக்கால் பெண்ணுரிமை மறுக்கப்பட்டது. இந்நாட்டிலே இருள் சூழ்ந்தது, மடமை புகுந்தது. இங்குள்ளோர் இருட்டிலே நெளியும் புழுக்களாயினர். இக்கால கட்டத்தில் பெண்ணினத்தின் விடிவெள்ளியாகத் தமிழ்த் தென்றல் திரு.வி.க., புதுமைக்கவிபாரதி, புரட்சிக் கவிஞன் பாரதிதாசன், தந்தை பெரியார் போன்ற அறிவியக்கத் தூதர்கள் தோன்றினர். பெண்ணுலகில் ஒளியேற்றினர். புகழ் சேர்த்தனர்.

இன்று பெண்கள் பட்டம் பெறுகின்றனர். சட்டங்கள் செய்கின்றனர். அறிவினில் ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்ற சங்கநாதம் எட்டுத்திக்கிலும் இன்று எதிரொலிக்கின்றது. ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஒன்றாக உலவுகின்றனர்.

பெண்ணினம் பெருமைப்பட வேண்டிய பொற்காலத்திலே பெண்ணினமும் சிந்திக்க வேண்டியன சில உள்ளன. அவற்றை நினைவூட்டுவதில் தவறில்லை. புதிய நாகரிகம் என்ற பெயரால், நம் உயர்ந்த பண்பாடு புதைக்கப்படுகின்றது. தாய்மை அழிக்கப்படுகிறது. இன்றைய போலி நாகரிகம் பெண்ணினத்தை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கின்றது.

சினிமா மோகம், பிற கேளிக்கைகள், இரவு விடுதிகள் இவைகளும், அரைகுறை ஆடைகளை அணிவதும் பெண்ணிற்குரிய அச்சம், நாணம், மடம், பயிற்பு இவைகளை மறப்பதும் வருந்தத்தக்கதே. இவற்றுக்கெல்லாம் இன்றைய சினிமாவும், சின்ன திரைகளும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. பெண்மையை எவ்வளவு கீழ்த்தரமாக காட்ட முடியுமோ அத்தனையும் இவைகள் செய்கின்றன. இது பெண்மையை போற்றுகின்றவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு சமூக நாகரிகம் என்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலில் அல்ல.

அக்காலப் பெண்கள், தாங்கள் உடுத்தியிருந்த ஆடையை களைந்து விட்டு மறு ஆடை உடுத்தி கொள்ளும்போது தன் எதிரே தன் கணவனின் புகைப்படம் இருந்தால் அதை மறைத்துவிட்டு, மறு ஆடையை உடுத்தி கொள்வார்களாம். அப்போது எல்லாம் பாலியல் பலாத்காரம் என்றால் என்னவென்பதே தெரியாது.

ஒரு வீட்டின் வாழ்வே அந்நாட்டின் வாழ்வாக அமைகிறது. ஒரு நாட்டின் வாழ்வும், தாழ்வும் பெண்ணினத்தைப் பொறுத்தே அமைகிறது. எனவே பெண்ணினம் வாழ வேண்டும். குடும்ப நலன் காத்து, குழந்தை வளம் பேணி குணத்தால் சிறக்க வேண்டும். வள்ளுவரும் வாசுகியுமாய்க் கருத்தால் இணைந்து, கற்பால் பிணைந்து, கல்வியால் ஓங்கி சுற்றம் பேணி, அறங்கள் போற்றி ஆன்றோர் நெறி வளர்த்து, அகிலம் வாழ, ஆக்கம் தழைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வையகம் வாழ வழி வகுக்க வேண்டும்.

புதுமையின் பேரால் நடமாடும் அநாகரிகங்களும், ஆடைக்குறைப்புகளும் அறவே நீங்க வேண்டும். அனைத்துலகம் பின்பற்றும் நம் உயர்ந்த நாகரிகம், பண்பாடு மீண்டும் தழைக்க வேண்டும். அகிலத்திற்கே தலைமையேற்ற அருந்தமிழ்ப்பண்பாடு பெண்ணினத்தாலே பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு தாய்மை எவ்வளவு முக்கியமோ? அதேப் போன்று பிள்ளைகளின் வளர்ப்பும் மிக முக்கியம். ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கையின் உச்சத்தை அடைவார்கள். ஒழுக்கத்தை தவறவிட்ட பிள்ளைகள் வாழ்க்கையில் வீழ்ச்சியை அடைவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சில பெற்றோர் தன் சிறு வயது பிள்ளைகள் கைப்பேசியில் விளையாடுவதை பெருமையாக நினைக்கின்றனர். அதேப் பிள்ளைகள் பள்ளி படிப்பில் பயிலும் போது தன் நண்பர்கள் ஒருங்கே அமர்ந்து கைப்பேசியில் எதை, எதையோ பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கு சுதந்திரம் தர வேண்டியதுதான். அந்த சுதந்திரம் அவர்களின் வருங்காலத்தை செப்பனிட வேண்டுமே தவிர சிதைத்து விட கூடாது. பிள்ளைகளின் ஒழுக்கம் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. முக்கியமாக பெண்கள் கையில் உள்ளது.

பெண்ணே நீ ஒரு பெண்ணை பெற்று விட்டாய். அவளை பற்றி உன் நினைவுகளில் எத்தனை கற்பனைகள். அவைகள் எல்லாம் கனிந்து வந்ததா? கனிந்து வர என்ன செய்ய வேண்டும்? பிள்ளை பருவம் வளர்த்து விடுவாய். ஆனால் வாலிப பருவம் உன்னை மிகவும் சிந்திக்க வைக்கும்.

அவள் கல்லூரி வாயிலில் நுழையும் போது, பல மாறுதல்கள் அவளிடம் தோன்றலாம். அவைகளில் சில நல்லவைகளாகவும், சில கெட்டவைகளாகவும் இருக்கலாம். உன் மகள் நல்லவளாக இருக்க, பெற்றவர்கள் பெயர் எடுக்க ஊக்க மருந்து அவளுக்கு சிறுபிள்ளையில் நீங்கள் கற்று தரும் ஒழுக்கம் என்ற மூலதனமே! அதுவே பெண்களை உயர்த்தும்.

பெண் என்பவள் கடவுளாக, மனைவியாக, தாயாக பொதுநல தொண்டில் தலைவியாக, ஒழுக்கத்தின் உயர்வாக வழிகாட்டப் பிறந்தவள். பெண்ணே! நீ சாகப்பிறந்தவள் அல்ல. சாதனை செய்ய பிறந்தவள். உன் பிறவியின் பெருமையை உலகிற்கு உண்மையாக்கு. பெண்ணே நீ கவிதை பாடும் காவியப்பெண் என்பதை மறவாதே!


- பேராசிரியை ச.சுமதி, பெங்களூரு

Next Story