நாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி அடுத்தடுத்து பலியான பரிதாபம்


நாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி அடுத்தடுத்து பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 9 May 2018 4:30 AM IST (Updated: 9 May 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி அடுத்தடுத்து பலியானார்கள். சாவிலும் இணை பிரியாத சகோதரர்களின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 37). இவரது தம்பி ராஜூ(30). அண்ணன் தம்பி இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். கொத்தனார் வேலை கிடைக்காத நேரத்தில், வேறு கூலி வேலை செய்வார்கள். சகோதரர்கள் இருவரும் மிகுந்த ஒற்றுமையாக இருந்து வந்தனர்.

கணேசனுக்கு திருமணமாகி சத்யா(32) என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். அண்ணனுக்கு திருமணமான பின்னரும் அவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் அண்ணன் வீட்டிலேயே ராஜூ வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜூவுக்கு கீழ்வேளூரை அடுத்த பாலக்குறிச்சியை சேர்ந்த விஜயாவை பெண் பார்த்து கணேசன் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின்னரே ராஜூ தனது அண்ணனை விட்டு பிரிந்து பாலக்குறிச்சியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். விஜயா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ராஜூ, பாலக்குறிச்சியில் இருந்து தனது அண்ணனை பார்ப்பதற்காக கீழ்வேளூருக்கு வந்து இருந்தார். நேற்று காலை கணேசன் தனது வீட்டில் இருந்த ‘சுவிட்ச் போர்டை’ சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான தனது அண்ணனின் உடல் அருகே இருந்து ராஜூ அழுது கொண்டு இருந்தார். கணேசன் இறந்தது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார், கணேசனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ராஜூ, போலீசாரிடம் தனது அண்ணன், இந்த சுவிட்ச் போர்டை சரிசெய்த போதுதான் மின்சாரம் தாக்கி இறந்தார் என போலீசார் முன்பு விளக்கி கூறினார். அப்போது அந்த ‘சுவிட்ச் போர்டில்’ எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதனால் ராஜூவையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே ஒரு உயிரை பறிகொடுத்த சோகத்தில் இருந்த கணேசனின் குடும்பத்தினர் அடுத்த சில மணி நேரத்தில் இன்னொரு உயிரையும் பறிகொடுத்ததால் மீளாத்துயரத்தில் ஆழ்ந்தனர். வாழ்விலும் இணைபிரியாமல் இருந்து வந்த சகோதரர்கள் சாவிலும் ஒன்றாகவே இணைந்தனர்.

இதற்கிடையில் கணவர் இறந்த தகவல் அறிந்து பாலக்குறிச்சியில் இருந்து வந்த ராஜூவின் கர்ப்பிணி மனைவி தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களையும் குளமாக்கியது.

இதையடுத்து போலீசார் மின்சாரம் தாக்கியதில் பலியான சகோதரர்கள் கணேசன், ராஜூ ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இருவருடைய உடல்களுக்கும் உறவினர்கள், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஒரே இடத்தில் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி அண்ணனும், தம்பியும் அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்தது.


Next Story