சொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி புதரில் வீசிய விவசாயி


சொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி புதரில் வீசிய விவசாயி
x
தினத்தந்தி 9 May 2018 4:45 AM IST (Updated: 9 May 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே சொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி புதரில் வீசியதாக போலீசாரிடம் விவசாயி பரபரப்பு தகவலை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே உள்ள வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும்(வயது 25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தால் மேலாளவந்தசேரி கிராமத்தில் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த எஸ்தரை கடந்த 6-ந் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்தரின் குடும்பத்தினர், உறவினர்கள், மேலாளவந்தசேரிக்கு சென்று ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம், எஸ்தர் எங்கே? என்று விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம், நெல்சன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் நெல்சன் தரப்புக்கும், எஸ்தரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்தரின் குடும்பத்தினர், மேலாளவந்தசேரியில் உள்ள மாதா கோவிலில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்து எஸ்தரை மீட்டுத்தர வேண்டும் என ஜோசப் ராஜசேகரின் குடும்பத்தாரிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து வெளிநாட்டில் இருந்த ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஜோசப் ராஜசேகர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக ஊக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக எஸ்தரை கொலை செய்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடல் பகுதியில் வீசியதாக நெல்சன் போலீசாரிடம் கூறினார்.

இது தொடர்பாக நெல்சனிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். பின்னர் எஸ்தரின் உடலை மீட்பதற்காக நீடாமங்கலம் மற்றும் தேவங்குடி போலீசார், நெல்சனை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார், உடலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நெல்சன் போலீசாரிடம் பரபரப்பான தகவலை தெரிவித்தார். அதில், தான் எஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள காரிச்சாங்குடியில், ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் வீசியதாக கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு உள்ள புதரில் இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் எஸ்தரின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி மூட்டைக்குள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் அதற்குள் இருந்த எஸ்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நெல்சனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து பிரச்சினைக்காக தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி புதருக்குள் வீசிய சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story