குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 May 2018 4:15 AM IST (Updated: 9 May 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் தா.பழூர் முதல்நிலை ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தோப்புத் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களுக்கு அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் மின்மோட்டார் பழுதடைந்ததால் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங் களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர், கிராமசபை கூட்டம் என பலதரப்பில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மனு அளிக்க முடியாமல் கோஷங்கள் எழுப்பியபடி நின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவ லறிந்த தா.பழூர் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், குடிநீர் ஆப்பரேட்டர் பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

அப்போது அதிகாரிகள் தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு அவ்வப்போது ஏற்படுகிறது. மோட்டார் வைத்து தேவைக்கும் அதிகமாக குடிநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும், மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story