அரசு பள்ளியில் படித்த மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
அரசு பள்ளியில் படித்த அவல்பூந்துறையை சேர்ந்த மாணவர் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றார்.
மொடக்குறிச்சி
அவல்பூந்துறை அருகே உள்ள செப்புநெருஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் மோகன். விவசாயி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகன் சதீஸ்.
சதீஸ் சமீபத்தில் நடந்த யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 727-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.
10-ம் வகுப்பு வரை அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பிளஸ்-2 முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சதீஸ் படித்துள்ளார்.
அதன்பின்னர் திருச்சி விவசாய கல்லூரியில் சேர்ந்து இளங்கலை அறிவியல் படித்து முடித்தார். பின்னர் தேர்வு எழுதி மத்திய ஆயுத காவல்படைக்கு 49-வது இடத்தில் தேர்வு பெற்று ஒடிசா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உதவி தளபதியாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த யு.பி.எஸ்.சி. ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 727-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
வெற்றி பெற்றது குறித்து சதீஸ் கூறும்போது, ‘நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கடின உழைப்பும், விடா முயற்சியுமே எனது வெற்றிக்கு காரணம். பணியில் இருந்துகொண்டே படித்தாலும் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். விவசாய குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் தான் மாணவர்கள் வாழ்க்கை பாதை மாறுகிறது.
தமிழக அரசும், மத்திய அரசும் விவசாய குடும்பத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு ஆவணமின்றி வங்கிகளில் கல்விக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கல்விக்கடன் வழங்கும் திட்டம் இருந்தாலும் பல்வேறு ஆவணங்களை கேட்டு, பெற்றோர்களை அலைக்கழிப்பதும், இழுத்தடிக்கும் நிலையும் இன்னும் உள்ளது. இந்த நிலையை மாற்றி கல்விக்கடனை எளிமையாக்க அரசு முன்வரவேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story