அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக மோசடி


அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக மோசடி
x
தினத்தந்தி 9 May 2018 4:30 AM IST (Updated: 9 May 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி செய்த போலி நிருபர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமாரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு வளையக்காரவீதி, பட்டேல் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். ஈரோட்டை சேர்ந்த மோகன்ராஜ், கிரிஜா என்ற 2 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எங்களிடம் வந்து, தாங்கள் கணவன்-மனைவி என்றும், பத்திரிகை நிருபர்களாக பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார்கள்.

மேலும் மாவட்ட கலெக்டர், அரசு உயர் அதிகாரிகளிடம் நெருக்கமான பழக்கம் உள்ளதாகவும் கூறி விலையில்லா வீட்டுமனை பட்டா, அரசு வேலை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற அரசு வழங்கும் உதவிகளை பெற்று தருவதாகவும் தெரிவித்தனர். வீட்டுமனை பட்டா பெறுவதற்கு ரூ.8 ஆயிரம் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி முன்பணமாக ரூ.3 ஆயிரமும், உதவித்தொகை பெறுவதற்கு ரூ.5 ஆயிரம் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி முன்பணமாக ரூ.2 ஆயிரமும் எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து விட்டோம். பின்னர் விசாரித்தபோதுதான் அவர்கள் 2 பேரும் பல பேரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. நாங்கள் அவர்களிடம் சென்று எங்களது பணத்தை கேட்டோம். அதற்கு போலீஸ் துறையில் உயர் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக எங்கள் மீது வழக்கு போட்டுவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். எனவே எங்களை ஏமாற்றிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

Next Story