தினம் ஒரு தகவல் : பந்தயம்


தினம் ஒரு தகவல் : பந்தயம்
x
தினத்தந்தி 9 May 2018 10:52 AM IST (Updated: 9 May 2018 10:52 AM IST)
t-max-icont-min-icon

பந்தயம் மனிதனை வேகம் எடுக்க வைத்த சொல். ஆரம்பத்தில் வேட்டைக்காக விலங்குகளோடு பந்தயம் வைத்தவன், பின்னாளில் விளையாட்டில் பந்தயத்தை கொண்டு வந்தான்.

இன்று தொழில், வாழ்க்கை என்று எல்லாவற்றிலுமே மற்றவர்களோடு பந்தயம் போட்டுக் கொண்டிருக்கிறான், மனிதன்.

ஆனால் மனிதனின் ஓட்டப்பந்தயம் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானது. கிரேக்க நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டப்பந்தயம் நடந்தது. ஒலிம்பியா நகரில் நடந்ததால் பின்னாளில் இந்த போட்டிக்கு ‘ஒலிம்பிக்ஸ்’ என்றே பெயர் வந்தது. மனிதனின் ஓட்டப்பந்தயம் மட்டுமல்லாமல், குதிரைப்பந்தயம், ஒட்டகப்பந்தயம், பனிச்சறுக்கு பந்தயம் என்பதோடு நின்று விடாமல், நண்டு, வான்கோழி, ஆமை போன்றவற்றையும் வைத்து பந்தயம் நடத்தினான், மனிதன்.

1885-ல் பென்ஸ் கார் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, பந்தயம் புது வேகம் எடுத்தது. ஆனால் அன்றைய காரை, நடப்பவர்கள் சிறிது வேகமாக நடந்தால் ‘ஓவர் டேக்’ செய்து விடலாம். அந்த அளவுக்கு அப்போதைய காரின் வேகம் இருந்தது. 1898-ல் பாரிஸ் நகரில் கவுண்ட் கேஸ்டன் என்பவர் மணிக்கு 39 மைல் வேகத்தில் காரை ஓட்டி பந்தயத்திலும், வேகத்திலும் முதல் சாதனை படைத்தார்.

இப்படி தொடங்கிய வேகம் என்ற சாதனை பல நூறு முறை முறியடிக்கப்பட்டது. இந்த முயற்சியில் பலர் முதுகெலும்பை உடைத்துக்கொண்டார்கள். சிலர் உயிரையும் விட்டிருக்கிறார்கள். கடைசியில் 1997-ல் ஆன்டிகிரீன் என்பவர் மணிக்கு 763 மைல் வேகத்தில் காரை ஓட்டி முந்தைய சாதனைகளை முறியடிக்கும் சாதனையை செய்தார். இந்த வேகம் ஒலியை விட அதிகமான வேகம். இந்த வேகத்தில் காரில் பயணித்த முதல் மனிதர் இவர் தான்.

வருடந்தோறும் கனடாவில் நடந்து வரும் ‘பாத்டாப்’ ரேஸ் என்பது உலகப்பிரசித்தி பெற்றது. இந்த போட்டி அலைகள் நிறைந்த கடலில் நடக்கும். இதில் 8 முதல் 10 அடி உயரம் வரை படகையே புரட்டிப் போடும் பெரிய அலைகளையும் சமாளித்து, உடன் போட்டியிடும் போட்டியாளர்களையும் சமாளித்தால் தான் வெற்றி கிடைக்கும்.

உலகிலேயே மிகவும் த்ரில்லான பந்தயம் என்றால், அது நியூ மெக்சிகோவில் நடக்கும் ஏர் பலூன் ரேஸ் தான். வண்ணமயமான இந்த போட்டியை பார்க்க வருடா வருடம் 5 லட்சம் மக்கள் இங்கு வருகிறார்கள். ஸ்கை ஜம்பிங், ஸ்கை டிரைவிங், சர்பிங், பனிமலை, ஆகாயம், கடல் என்று, ஒரு இடத்தையும் மிச்சம் வைக்காமல் மனிதன், எல்லாவற்றிலும் பந்தயம் வைத்து விட்டான்.

இந்த பந்தயங்கள் எல்லாமே மனிதர்கள் அல்லது விலங்குகள் அல்லது வாகனங்கள் இவற்றோடு தான் இருக்கும். ஆனால் கற்கள் நடத்தும் பந்தயம் கூட உலகில் உள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில் இந்த பந்தயம் நடைபெறுகிறது. இந்த கிடு கிடு பள்ளத்தாக்கில் வருடத்துக்கு 860 அடி என்ற வேகத்தில் தானாகவே நகர்ந்து இந்த பந்தயத்தில் கலந்து கொள்ளும் இந்த கற்களை பார்க்க சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் கற்கள் தானாக நகர்வது எதனால் என்பது இன்னமும் விஞ்ஞானத்துக்கு பிடிபடாத மர்மமாகவே இருக்கிறது. 

Next Story