தொடர்மழை எதிரொலி: வைகை அணை, குளங்களுக்கு நீர்வரத்து
தொடர்மழை எதிரொலியாக வைகை அணை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆண்டிப்பட்டி
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பம், உத்தமபாளையம், மேகமலை, போடி ஆகிய பகுதிகளிலும், மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது.
தொடர் மழை எதிரொலியாக, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொட்டக்குடி ஆறு, முல்லைப்பெரியாற்றில் இருந்து அதிக அளவில் வைகை அணைக்கு தண்ணீர் வந்து சேருகிறது.
இதற்கிடையே வைகை அணைக்கு வரும் தண்ணீரை, கரையோரத்தில் உள்ள விவசாயிகள் மின்மோட்டார்கள் மூலம் திருடி வந்தனர். இதனைத்தொடர்ந்து மோட்டார்களை பொதுப்பணித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன்காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட உறைகிணறுகள் மூலம் வினியோகம் செய்யப்படும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியுள்ளது.
அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைக்கும் என்று கருதிய நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் தேவாரம், சிலமலை, ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக உப்புக்கோட்டை அருகே டொம்புச்சேரியில் உள்ள டொம்பச்சியம்மன் கண்மாய், போசன் கண்மாய், மணியன் குளம், சின்னகரடு பெரிய கண்மாய், அம்மாபட்டி வல்கரடு கண்மாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு தற்போது தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தண்ணீரை பயன்படுத்தி மக்காச்சோளம், வெள்ளை சோளம், கம்பு போன்றவற்றை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story