மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் - ரூ.50 ஆயிரம் திருட்டு


மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்கள் - ரூ.50 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், மதுக்கடையின் சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி நகர் பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் இருந்தன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது சீர்காழி ஈசானிய தெருவில் மட்டும் ஒரு மதுக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) சீர்காழி ஊழியக்காரன்தோப்பு தெருவை சேர்ந்த அருள் (வயது 44) என்பவர் உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு மதுக்கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல் அருள் மற்றும் பணியாளர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் சுவரில் மிகப்பெரிய அளவில் துளை போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 7 அட்டை பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அருள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்கடையின் சுவரில் துளை போட்டு பணம்-மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story