திருப்பூரில் நடந்த பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது


திருப்பூரில் நடந்த பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 4:45 AM IST (Updated: 10 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடந்த பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கருவம்பாளையம் அக்கரை தோட்டத்தில் பிரிடிண்டி பட்டறை நடத்தி வந்தவர் ஜோநோபல்(வயது 35). கடந்த 5-ந்தேதி இரவு பிரிண்டிங் பட்டறைக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜோநோபலை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும், கூர்மையான ஆயுதங்களால் கழுத்தில் வெட்டியது. மேலும், அங்கு வேலை செய்து வந்த செல்வி என்ற பெண்ணையும் தாக்கி விட்டு, ஜோநோபலிடம் இருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் நிறுவனத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் எடுத்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோநோபல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செல்வியிடமும் விசாரணை நடத்தினார்கள். அவர் கொடுத்த தகவலின்படி அங்கு வேலை செய்த பணியாட்களான சதீஸ், லோகேஸ் மற்றும் ஸ்டீபன்ராஜ் என்ற 3 பேரும் இணைந்து ஜோநோபலை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று கொலையாளிகள் ஜோநோபலின் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும், அந்த மோட்டார் சைக்கிள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக ஸ்டீபன்ராஜ் அங்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார், பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் ஸ்டீபன்ராஜை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சம்பவத்தன்று சதீஸ், லோகேஸ் மற்றும் ஸ்டீபன்ராஜ் ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்களிடம் போதிய பணம் இல்லாததால் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் ஜோநோபலை கொன்று அவரிடம் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த 3 பேரும் இணைந்து ஜோநோபலை அடித்து கொன்று விட்டு அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தையும், பட்டறையில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்டீபன்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய சதீஸ், லோகேஸ் ஆகியோர் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story