ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு


ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேந்தமங்கலம் அக்கியம்பட்டியை சேர்ந்த வீராங்கனை கமலிக்கு சொந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்-கலைச்செல்வி தம்பதியின் மகள் கமலி. முதுகலை பட்டதாரியான இவர் பளுதூக்கும் வீராங்கனை ஆவார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி சமீபத்தில் நடந்தது. அதில் வீராங்கனை கமலி, இந்தியா சார்பில் பளுதூக்கும் போட்டியில் 47 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் சொந்த ஊரான அக்கியம்பட்டி கிராமத்திற்கு திரும்பினார். அவர் வரும் தகவலை அறிந்த கிராம மக்கள் அவரை வரவேற்க ஆர்வமுடன் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் காத்திருந்தனர்.

காலை 7.30 மணிஅளவில் வீராங்கனை கமலி அங்கு காரில் வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் ஊர் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

பின்னர் கமலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். எனது தந்தை இறந்து விட்ட நிலையில், எனது தாயார், உறவினர்கள் மற்றும் இந்த ஊர் பொதுமக்கள் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பெரிய உதவிகள் செய்தனர். அதை நான் மறக்க மாட்டேன். ரெயில்வே துறையில் பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளதால் அதற்கு விண்ணப்பித்து உள்ளேன். வேலைக்கான உத்தரவு வந்ததும் பணியில் சேர்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அக்கியம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், மனவளக்கலை மன்ற தலைவர் ஆசிரியர் சுந்தரம், சேந்தமங்கலம் அரிமா சங்க தலைவர் வருதராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பாலன் உள்பட பலர் கமலிக்கு வாழ்த்து தெரிவித்தனர். கமலிக்கு ஜீவா என்ற அண்ணன் உள்ளார். 

Next Story