ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6-வது நாளாக நீடிப்பு, வாயில் கருப்பு துணி கட்டி தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்


ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6-வது நாளாக நீடிப்பு, வாயில் கருப்பு துணி கட்டி தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. வாயில் கருப்பு துணி கட்டி தினக்கூலி பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தோட்டக்கலைத்துறை பண்ணை மற்றும் பூங்காக்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், இடைக்கால நிவாரணமாக மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 4-ந் தேதி முதல் தினக்கூலி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 6-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் புல்வெளியில் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதற்கிடையே தோட்டக்கலைத்துறை சார்பில், ரோஜா பூங்காவில் பணிபுரிய தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டதால் தங்களது வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் தினக்கூலி பணியாளர்கள் சிலர் ரோஜா பூங்காவுக்கு பணிக்கு சென்றனர். போராட்டம் குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொது செயலாளர் போஜராஜ் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் மாலை நிர்வாகிகளை அழைத்து பேசினார். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதாலும், வருடம் முழுவதும் பணியாளர்களுக்கு வேலை இருப்பதாலும் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்த விவரங்கள் தோட்டக்கலைத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார். தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெறும். ரோஜா பூங்காவில் ஒருசில தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு திரும்பி உள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story