என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
வேலை நாட்களை குறைப்பதை கண்டித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி
என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 41 பேர்சுரங்கம் 1 ஏ-வில் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 16 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சுரங்கம் 1ஏ-வில் இருந்த பணிகளின் ஒரு பகுதி தனியாருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிருந்த எந்திரங்கள், சுரங்கம் 2-க்கு மாற்றப்பட்டன.
இதைகாரணம் காட்டி 41 ஒப்பந்த தொழிலாளர்கள், சுரங்கம் 2 மற்றும் சுரங்கம் 1 ஆகிய பகுதிகளில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு மாதத்தில் பணி நாட்கள் குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சுரங்கம் 1ஏ-வில் மீண்டும் வேலை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர், என்.எல்.சி. அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரங்கம் 1ஏ ‘ஷிப்டு’ அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் ஒப்பந்த தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி விரைவில் வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதில் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் சுரங்கம் 1ஏ நுழைவு வாயில் முன்பு நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுரங்கத்திற்கு முதல்கட்ட பணிக்கு செல்ல வேண்டிய ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், பொறியாளர்கள் என யாரும் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் குறித்து விரைவில் பேசி முடிவு எடுக்கலாம், மறியலை கைவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து நிரந்தர தொழிலாளர்களும், பொறியாளர்களும் பணிக்கு சென்றனர். ஆனால் சுரங்கம் 1ஏ-வில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல், மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக அங்கேயே காத்து நின்றனர்.
இதற்கிடையே என்.எல்.சி. மனிதவளத்துறை அதிகாரிகளுடன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 14-ந் தேதிக்குள் 41 ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று என்.எல்.சி. அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சுரங்கம் 1ஏ-வில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story