கடலூரில் பயிற்சி காவலர்களுக்கான எழுத்து தேர்வு


கடலூரில் பயிற்சி காவலர்களுக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பயிற்சி காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பார்வையிட்டார்.

கடலூர்

தமிழக காவல்துறைக்கு கடந்த ஆண்டு புதிதாக 12,535 பயிற்சி காவலர்கள் (2-ம் நிலை) தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 41 தற்காலிக, நிரந்தர போலீஸ் பயிற்சி பள்ளிகளில் கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் 249 பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளியின் முதல்வராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும், துணை முதல்வராக துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்டிபாபுவும் உள்ளனர்.

பயிற்சி காவலர்களுக்கு, கவாத்து போதகரான இன்ஸ்பெக்டர் சிவசங்கரனும், சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள 7 சட்ட போதகர்களும், 4 கவாத்து போதகர்களும் பயிற்சி அளித்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களில் கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தல், லத்திகளை கையாளுதல், கராத்தே, நீச்சல் மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கடந்த 7-ந்தேதி முதல் பயிற்சி காவலர்களுக்கு சட்டம் சார்ந்த எழுத்து தேர்வு நடந்து வருகிறது. கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் இந்த தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை கண்காணிப்பதற்காக விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும், தஞ்சாவூரில் இருந்து 6 சப்-இன்ஸ்பெக்டர்களும் வந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக நடந்த எழுத்து தேர்வை பயிற்சி பள்ளி முதல்வரான போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பார்வையிட்டார். அப்போது கவாத்து போதகர் சிவசங்கரன் உடன் இருந்தார்.

இத்தேர்வுகள் இன்று (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. அதன்பிறகு 11, 12 ஆகிய தேதிகளில் கவாத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளில் பயிற்சி காவலர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் (மொத்த மதிப்பெண் 500) சீனியாரிட்டி வழங்கப்படும்.வருகிற 30-ந்தேதியுடன் 7 மாத பயிற்சி நிறைவடைகிறது. அதன்பிறகு வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரு மாத காலம் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு வெவ்வேறு மாவட்டங்களில் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

Next Story