உயிர் காக்கும் கலையை கற்போம்!


உயிர் காக்கும் கலையை கற்போம்!
x
தினத்தந்தி 10 May 2018 12:00 PM IST (Updated: 10 May 2018 11:44 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியதும் எந்த ஊருக்கு செல்வது? எப்படி மகிழ்ச்சியாக நாட்களை செலவிடுவது? எந்த உறவினர் வீட்டுக்கு போகலாம்? என மாணவ, மாணவிகள் கற்பனை வானில் சிறகடித்து பறக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

பெரும்பாலும், நகர்புறத்து மாணவர்கள் கிராமங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், கிராமத்தில் இருப்பவர்கள் நகரங்களுக்கும் விருந்துக்கு செல்கிறார்கள். சிலர் பக்கத்து ஊரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விடுமுறையை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். இவ்வாறு செல்கின்ற மாணவச் செல்வங்கள் அவர்களின் கவனக்குறைவாலும், உறவினர்களின் அலட்சியத்தாலும் சில நேரங்களில் விபத்துக்கும், ஆபத்துக்கும் ஆளாகிறார்கள்.

குறிப்பாக நீச்சல் தெரியாமல் ஏரி, குளம், குட்டை, நீர் நிரம்பிய கல்குவாரி பள்ளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று ஆழம் தெரியாமல் காலைவிட்டு தண்ணீரில் விழுந்து இறக்கும் சோகங்கள் தொடர்கின்றன. நீர்நிலைகளில் நீச்சல் தெரிந்த மாணவர்கள் உற்சாகமாக குளிப்பதைப் பார்த்தவுடன் நீச்சல் தெரியாத மாணவர்களும் குளிக்கவேண்டும் என நினைத்து, பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நீர் நிலைகளில் இறங்கி விடுகின்றனர். இதனால் விலை மதிப்பில்லா மனித உயிர்கள் நீரில் மூழ்கி மடிகின்றன.

சில இடங்களில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற முயற்சி செய்வோரும் சேர்ந்தே இறக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏராளமான நிகழ்வுகளை நம் தமிழகம் கண்டு இருக்கிறது. இன்னும் கண்டு வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறையில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். இந்த விடுமுறையிலும் பலர் இறந்து இருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் விடுமுறைக் காலங்களில் மெரினா கடற்கரை, கோவளம் கடற்கரை இன்னும் பிற கடற்கரைக்கு குளிக்க செல்கின்றனர். இளமையின் துடிப்பால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு எவ்வளவு தூரம் கடலில் செல்கிறோம் என தெரியாமல் கடலின் ஆபத்தான பகுதிக்கு சென்று விடுகின்றனர். பின்பு சுருட்டிச் செல்லும் அலைகளுக்கு இரையாகி மரணத்தை தேடிக்கொள்கின்றனர்.

தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ள பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கின்ற மாணவர்கள் பலரும் ஏனோ உயிர் காக்கும் கலையான நீச்சலை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு காலக் கட்டத்தில் நீச்சல் கற்றுக்கொள்வது கட்டாயமான ஒன்றாய் இருந்தது. அப்போதெல்லாம் 5, 6 வயதிலேயே நீச்சல் கற்றுக்கொள்வார்கள்.

நீச்சல் பயிற்சிக்கான உகந்த காலமாக மழைக்காலங்கள் இருந்து வந்தன. மழை பெய்து குளங்கள், கிணறுகள் நிரம்பியதும் அங்கே தங்களின் பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தனர். ஆனால், காலப்போக்கில் நீச்சல் கற்றுக்கொள்வதிலும், கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் குறைந்து போயிற்று.

குறிப்பாக நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புறத்தினருக்கு நீச்சல் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருந்தும் யாரும் ஆர்வம்காட்டுவதில்லை. நகர்ப்புறங்களிலும் பல இடங்களில் நீச்சல் கற்றுக்கொள்ள நீச்சல் குளங்கள் இருந்தும் அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் தான் இருக்கிறது.

நீச்சல் தெரியாமல் இருப்பதன் விளைவுதான் நீரில் மூழ்கி மனித உயிர்கள் இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. இனியும் இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் இருக்க சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் தெரிந்த பெற்றோரும், உறவினர்களும் சிறு பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுப்பதன் மூலம் நீரில் மூழ்கி மனித உயிர்கள் பலியாகும் பரிதாபங்கள் வெகுவாக குறைந்துவிடும்.

ஆசிரிய பெருமக்களுக்கும் பங்கு உண்டு. தேர்வுக்காக மாணவர்களை நன்முறையில் தயார்படுத்துவது போன்று விடுமுறை நாட்களில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி வகுப்பு எடுக்க வேண்டும். குறிப்பாக நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளுக்கு செல்வதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ஊட்ட வேண்டும்.

பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும், விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிப்பது குறித்தும் அறிவுரை வழங்குதல் நல்லது.

கிராமசபைக் கூட்டங்களில் இதனை வலியுறுத்தி கல்குவாரி பள்ளங்கள், குளம், குட்டை, ஏரி, கிணறு போன்றவற்றில் வேலி அமைப்பது, தடுப்புச் சுவர்கள் அமைப்பது மற்றும் நீர்நிலைகள் பற்றிய எச்சரிக்கைப் பலகைகளை வைப்பது நலம் பயக்கும். அரசாங்கமும் இதற்கு தனி கவனம் செலுத்தி கிராமப்புறங்களிலும் நீச்சல் பயிற்சி மையங்களை ஏற்படுத்தி தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

மொத்தத்தில் நீச்சலின் அவசியத்தை உணர்த்துவோம். நீர்நிலைகளில் மனிதர்கள் மூழ்கி இறப்பதை தடுப்போம்.

- ஆ.அருமைநாதன், சமூகஆர்வலர்

Next Story