மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு தேவையா? ரங்கசாமி கேள்வி


மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு தேவையா? ரங்கசாமி கேள்வி
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை ராஜினாமா செய்ய ஆட்சியாளர்கள் கேட்கும் நிலையில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாத இந்த அரசு தேவையா? என்று ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் காங்கிரஸ் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையிலும், சட்டமன்றத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்டு விட்டனர். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் எதற்கெடுத்தாலும் கவர்னரை குறை சொல்வதை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கவர்னர் கோப்புகளை தடுப்பதாக கூறுகிறார். ஆனால் கவர்னர், முதல்-அமைச்சர் அலுவலகத்தில் கோப்புகள் உள்ளதாக கூறுகிறார். இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசில் புதிய திட்டம் ஏதும் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அங்கன்வாடி, பொதுத்துறை ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் போட முடியாத நிலை இருந்து வருகிறது.

இலவச அரிசி வழங்காததற்கு ஏதேதோ காரணம் கூறுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிகூட வழங்கவில்லை. மாநில வளர்ச்சியில் அக்கறையின்றி செயல்படுகிறார்கள். சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது.

சமீபத்தில்கூட மாகியில் இரட்டைக்கொலை நடந்துள்ளது. போலீஸ் ஜீப் கொளுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் கொலை, வெடிகுண்டு வீச்சு, திருட்டுகள் தொடர்கின்றன. தற்போது கோடைவிடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டைவிட்டு எங்கேயும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு மக்கள் பயத்தில் உள்ளனர்.

கவர்னரின் உத்தரவு தொடர்பாக மத்திய உள்துறையில் இருந்து வந்த கடிதத்தை வைத்துக்கொண்டு கவர்னர் ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். எந்த திட்டத்தையும் இந்த காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. அப்படி இருக்க இந்த அரசு மட்டும் இருக்கலாமா? இந்த அரசு தேவையா?

காலாப்பட்டில் தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி உள்ளனர். மக்கள் எதிர்க்கும் ஒரு தொழிற்சாலையை காங்கிரஸ் பிரமுகர் வேண்டும் என்கிறார். அங்கு நடந்த கலவரத்துக்கும் அவர்தான் காரணமாக இருந்துள்ளார்.

கவர்னருடன் மோதல்போக்கில் ஈடுபட்டால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்? இந்த ஆட்சியில் புதிய தொழிற்சாலை ஏதாவது வந்ததா? கடந்த 2 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு தந்தார்கள்?

இளைஞர்கள் பலர் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். இந்த அரசு செயலற்ற அரசாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது. பாசிக் நிறுவனத்தின் மது பார்களுக்கான உரிமத்தைக்கூட புதுப்பிக்கவில்லை. கூட்டுறவு, சர்க்கரை ஆலை, பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை. தேவைப்பட்டால் மக்களுக்காக போராட்டம் நடத்துவோம். விரைவில் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து இந்த அரசு குறித்து புகார் செய்வோம். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை வரவேற்கிறோம்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

பேட்டியின்போது எம்.எல். ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாரன், அசோக் ஆனந்து, டி.பி.ஆர்.செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story