சாதி சான்று கேட்டு நள்ளிரவு மயானத்தில் குடியேறிய குறவன் இன மக்கள்


சாதி சான்று கேட்டு நள்ளிரவு மயானத்தில் குடியேறிய குறவன் இன மக்கள்
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 8:04 PM GMT)

திருப்பத்தூரில் சாதி சான்று கேட்டு நள்ளிரவு மயானத்தில் குறவன் இன மக்கள் குடியேறினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

திருப்பத்தூர்,

தமிழ்நாடு குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சாதி சான்றிதழ் (எஸ்.சி.) கேட்டு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 144 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, திருப்பத்தூரில் உள்ள 2 திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

அங்கு அவர்கள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை, போலீசார் சமாதானம் செய்தும் அவர்கள் பட்டினி போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் ஒரு சிலர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால், மருத்துவ குழுவினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட கூடாது என போலீசார் அவர்களை விடுவித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் பெரியார்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் நள்ளிரவு பந்தல் அமைத்து குடியேறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அவர்களை பேச்சுவார்த்தைக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., தாசில்தார் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்ததை நடந்தது. அப்போது அதிகாரிகள் தரப்பில், 10 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story