குட்டையில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் சாவு


குட்டையில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள குட்டையில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

டி.என்.பாளையம்,

திருப்பூர் மாவட்டம் பூனுவப்பட்டியை சேர்ந்தவர் டக்லத் (வயது 30). இவர் திருப்பூர் மாநகராட்சியில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் கார்த்திக் (20), அதே பகுதியை சேர்ந்தவர் நவீன் (23). டக்லத், கார்த்திக், நவீன் ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் 3 பேரும் நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றிப்பார்க்க காரில் வந்தார்கள். அணையை சுற்றி பார்த்துவிட்டு அருகே சாமியார்மடுவு என்ற இடத்துக்கு சென்றார்கள். அப்போது அங்குள்ள ஒரு குட்டையை பார்த்ததும் 3 பேருக்கும் அதில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

உடனே 3 பேரும் குட்டையில் இறங்கி குளித்தார்கள். அப்போது திடீரென டக்லத் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த மற்ற 2 பேரும் அதிர்ச்சி அடைந்தார்கள். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்கள். சத்தம் கேட்டு அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் நீந்தி சென்று டக்லத்தை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இதில் நீரில் மூழ்கி டக்லத் பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்குள்ள பாறை இடுக்கில் சிக்கி இருந்த அவரது பிணத்தை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டக்லத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த டக்லத்துக்கு கிருபா (25) என்ற மனைவி உள்ளார். 

Next Story