தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று ரஜினிகாந்த் கனவு காண்கிறார் செல்லூர் ராஜூ பேட்டி


தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று ரஜினிகாந்த் கனவு காண்கிறார் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என ரஜினிகாந்த் கனவு காண்கிறார். அது பலிக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.பி.ஓ. காலனி மற்றும் ஆரப்பாளையம் கண்மாய் கரை ஆகியவற்றில் நடந்து வரும் சாலை பணிகளையும், விராட்டிபத்து மீனாட்சி நகரில் நடந்து வரும் நலவாழ்வு மைய கட்டிட பணிகளையும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் சொக்கலிங்க நகர், கிருஷ்ணசாமி தெரு ஆகியவற்றில் சாலை பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் அரசியல் ரீதியாக யாரையும் ஆதரிக்கவில்லை. இனியும் ஆதரிக்க போவதில்லை.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்-அமைச்சர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒரு போதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது. தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், அதனை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக ரஜினிகாந்த் அறிவித்த நன்கொடை தொகையை இன்னும் வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது ரஜினியின் பேச்சை மக்கள் எப்படி நம்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story