சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி செல்போனில் வைரலாகி வருவதால் பரபரப்பு


சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி செல்போனில் வைரலாகி வருவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 8:39 PM GMT)

துறையூர் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளி பிரேத பரிசோதனை செய்யும் வீடியோ காட்சி செல்போனில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு துறையூர், கீரம்பூர், சொரத்தூர், குன்னுப்பட்டி, செல்லிப்பாளையம், மருவத்தூர், முருகூர், வெங்கடேசபுரம் என சுமார் 42 ஊராட்சி மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர விபத்தில் பாதிக்கப்படுகிறவர்கள் முதலில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள். பின்னர் இங்கிருந்து மேல் சிகிச்சை என்ற பெயரில் துறையூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை உள்ளது.

துறையூர் அரசு மருத்துவமனையில் 12 டாக்டர்கள் பணியில் உள்ளனர். தலைமை டாக்டராக தேவராஜன் உள்ளார். இவர் தற்போது விடுமுறையில் உள்ளதால் டாக்டர் வேல்முருகன் பொறுப்பு தலைமை மருத்துவராக உள்ளார். ஆர்த்தோ டாக்டர்கள் 2 பேர், செவிலியர்கள் 17பேர், துப்புரவு பணியாளர்கள் 4 பேரும் உள்ளனர். சமையலர்கள் தற்போது தொடர் விடுமுறையில் உள்ளனர். அதனால் மருத்துவமனை உதவியாளர்களே சமையல் வேலையையும் செய்து வருகின்றனர். லேப் டெக்னீசியன் ஒருவர், பிரேத பரிசோதனை செய்பவர்கள் 3 பேர் என சுமார் 40 பேர் இங்கு பணியில் உள்ளனர். டாக்டரின் பணி நேரம் காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை. இதில் மதியம் 12 மணி வரை வெளி நோயாளிகளை பரிசோதனை செய்வார்கள். மற்ற நேரங்களில் டூட்டி டாக்டர்கள் இருப்பார்கள்.

இந்த நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் கைலி கட்டியபடி ஒருவர் பிரேத பரிசோதனை செய்வதும், உடற்கூறு செய்யப்பட்ட உடலை ஊசியால் தைப்பதும் போன்ற காட்சிகள் செல்போன்களில் வீடியோவாக வெளியானது. இந்த காட்சியை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர் செய்ய வேண்டிய பிண பரிசோதனையை கைலி அணிந்து செய்யும் நபர் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் துறையூர் அரசு மருத்துவமனையில், 3 மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபார்த்து வரும் துறையூர் அருகே உள்ள வாலீஸ்புரத்தை சேர்ந்த வீரமணி என்பவர் தான் அந்த வீடியோ காட்சியில் பிரேத பரிசோதனை செய்வதும், உடலை ஊசியால் தைப்பதும் என தெரிய வந்தது. இந்த காட்சி செல்போன்களில் வைரலாகி வருவது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தைக்கவும், துணியால் சுற்றி பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கும் பெரியசாமி, மதியழகன் என 2 பணியாளர்கள் இங்கு உள்ளனர். இந்த நிலையில் சலவை தொழிலாளி வீரமணி பல மாதங்களாகவே பிரேத பரிசோதனை போன்ற வேலையை செய்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி மருத்துவமனை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல் சிகிச்சைகளிலும் அலட்சியம் காட்டக் கூடாது எனவும், அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், சிகிச்சைக்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனை செய்யும் போது டாக்டர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் சம்பந்தமில்லாத நபர் கைலி அணிந்து கொண்டு பிரேத பரிசோதனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகமும் மருத்துவ துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story