மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு: போலீசார் கண்முன்னே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி


மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு:  போலீசார் கண்முன்னே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 May 2018 2:38 AM IST (Updated: 11 May 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் கண்முன்னே வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(வயது 30). கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய மனைவி தீபிகா.

இவர், அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக வந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் கண்ணகி நகர் போலீசார், தீபிகாவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.

தற்கொலை முயற்சி

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குப்பன், “அடிக்கடி என்னையும், எனது குடும்பத்தையும் தொல்லைபடுத்தி வருகிறீர்கள்” என்று கூறி மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்லக்கூடாது என்றார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளாமல் தீபிகாவை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த குப்பன், திடீரென போலீசார் கண் முன்னே தன்னிடம் இருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் ரத்தம் கொட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், குப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story