மாவட்ட செய்திகள்

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் + "||" + Namakkal Union Rs 1 crore development project works

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
நாமக்கல் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வசந்தபுரம், வகுரம்பட்டி, மரூர்பட்டி, சிலுவம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதன் தொடக்கமாக வசந்தபுரம் ஊராட்சி தாண்டாக் கவுண்டனூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5½ லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அம்மா பூங்கா ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரூர்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் இயற்கை சாண உரம் தயாரிக்கும் தொட்டி அமைக்கும் பணி, சின்ன ஏரி பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜன், அருள்திருமாறன், உதவி பொறியாளர் நைனாமலைராஜ் உள்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.