வடமாநில பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்


வடமாநில பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 11 May 2018 11:02 AM IST (Updated: 11 May 2018 11:02 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி வடமாநில பெண்ணை பிடித்து போலீசில் கிராம மக்கள் ஒப்படைத்தனர். ஆனால் அவரை படம் எடுக்க விடாமல் தடுத்ததால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

வேப்பூர்,

தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி செல்வதற்காக வடமாநிலங்களில் இருந்து ஒரு கும்பல் ஊடுருவி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவி வருகிறது. இதையடுத்து சந்தேகமான முறையில் சுற்றித்திரியும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது பற்றிய விவரம் வருமாறு.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வடமாநில பெண் ஒருவர் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்று கருதி, அவரை பிடித்தனர். பின்னர் இது பற்றி வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பூமாலை, போலீஸ் ஏட்டு புண்ணியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வடமாநில பெண்ணை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர், தங்களது செல்போனில் அந்த பெண்ணை படம் பிடித்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களுடைய செல்போனை பறித்தும், கீழே தட்டியும் விட்டனர். இதையடுத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பூமாலை உள்ளிட்ட போலீசாரை சிறை பிடித்தனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சென்று, வடமாநில பெண்ணையும், சிறை வைக்கப்பட்ட போலீசாரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அந்த வடமாநில பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

8 பேர் கைது

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார், காட்டுமயிலூர் கிராமத்துக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் வீடுகளில் இருந்த 27 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசாரை தாக்கியதாக காட்டுமயிலூரை சேர்ந்த ராயப்பன், ராஜேந்திரன், முருகன், மகாலிங்கம், மூக்கன், வேல்முருகன், பன்னீர்செல்வம், கருப்பையா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மற்றவர்களை விடுவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர். வடமாநில பெண்ணை மீட்டு வரும் போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story