காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 May 2018 5:00 AM IST (Updated: 12 May 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சையில் தையல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தஞ்சாவூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், மாநில பொருளாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் பாலு வரவேற்றார்.

இதில் மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் சேம.நாராயணன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பாண்டியன், தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேசன் மாவட்ட தலைவர் பத்மநாபன், தாய் திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் சேகர் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அனைவரும் பச்சை நிற துண்டுகளை தோளில் அணிந்திருந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்டீபன்ராஜ் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் மத்தியஅரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் காலஅவகாசம் கேட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயம் இல்லையென்றால் வேறு எந்த தொழிலையும் நம்மால் செய்ய முடியாது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைத்து, தமிழகத்திற்குரிய காவிரி தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நாங்கள், அடுத்தகட்டமாக மறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார். 

Next Story