முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பவானி வருகை: காலிங்கராயன் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பவானி வருகை: காலிங்கராயன் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 11 May 2018 11:15 PM GMT (Updated: 11 May 2018 10:13 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பவானி வருகிறார். காலிங்கராயன் மணிமண்டபத்தை அவர் திறந்து வைக்கிறார்.

ஈரோடு, 

பொதுப்பணித்துறை சார்பில், பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் காலிங்கராயன் மணிமண்டபம் மற்றும் அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு காலிங்கராயன் மணி மண்டபம் மற்றும் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக விளங்கிய காலிங்கராயனின் வாரிசுதாரர்களை கவுரவிக்க உள்ளார்.

பின்னர் அவர், ரூ.76 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் 1,622 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.58 கோடியே 35 லட்சம் செலவில் 25 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 5 ஆயிரத்து 779 பேருக்கு ரூ.31 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தின் செயல்பாட்டினையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

விழாவில் எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), வி.சத்தியபாமா (திருப்பூர்்), சி.கோபாலகிருஷ்ணன் (நீலகிரி), எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு என்டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு(ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), ஈ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்) சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

விழாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வரவேற்று பேசுகிறார். முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா நன்றி கூறுகிறார்.

Next Story