304 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு


304 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 May 2018 10:58 AM IST (Updated: 12 May 2018 10:58 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி-பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் 304 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு பராமரிப்பு மையங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தர்மபுரி,

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது கண்டறியப்படும் குழந்தைகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளை உண்டு உறைவிட பள்ளிகளிலோ, இணைப்பு மையங்களிலோ சேர்த்து தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு குடியிருப்பிலும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்கள் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் சேகரித்தனர். அப்போது நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 161 குழந்தைகளும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 143 குழந்தைகளும் என மொத்தம் 304 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களை ஒன்றிய அளவில் செயல்படும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Next Story