பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெருமுனை பிரசாரம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெருமுனை பிரசாரம்
x

எலச்சிபாளையம், பள்ளிபாளையத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.

எலச்சிபாளையம்,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன கோபுரங்களில் (டவர்) தனியார் நிறுவனங்கள் தங்களது ஆண்டனாவை பொருத்தி சேவையை வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு துணை டவர் நிறுவனம் அமைக்க உள்ளதால் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தும் வகையிலும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அண்ணாசிலை அருகில் நடைபெற்ற பிரசாரத்திற்கு சங்க கிளை செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் சி.ஐ.டி.யு. ராயப்பன், பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கத்தின் தமிழ்மணி, தங்கராசு, ராஜேந்திரன், பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செல்போன் கோபுரங்களை மட்டும் பிரித்து தனியாக துணை கோபுர நிறுவனம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கூட்டமைப்பின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற தெருமுனை பிரசாரம் பள்ளிபாளையம் பஸ்நிலையம் 4 ரோட்டில் நடந்தது.

அப்போது பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கினார்கள். இந்த தெரு முனை பிரசாரத்தில் சேலம் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Next Story