பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும்


பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், பூம்புகார் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி பொறுப்பாளர் அமிர்த விஜயகுமார் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம், மண்டல பொறுப்பாளர் வரதராஜன், நாகை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி, கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரின் அறிவுரைப்படி தமிழகத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதலாவது கூட்டம் பூம்புகார் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

பூம்புகார் தொகுதியில் 302 வாக்குச்சாவடிகளில், 250 வாக்குச்சாவடிகளுக்கு புதிதாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மீதமுள்ள 52 வாக்குச்சாவடிகளுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தினமும் வீடு,வீடாக சென்்று பொதுமக்களிடம், பிரதமர் நரேந்திரமோடி அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை பா.ஜனதா கட்சியின் ஆட்சியால் மட்டுமே அமைக்க முடியும். மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, அதன்மூலம் தமிழகத்திற்கு உரிய காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வன்முறையை தூண்டி அமைதியை சீர்குலைக்கும் வகையில் ம.தி.மு.க. செயல்படு கிறது. எனவே உடனடியாக ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் கோடையிலும் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். ஏனென்றால் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு போதுமான அளவு மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ததே முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் மணிசெல்வம், ஒன்றிய பொதுச் செயலாளர் அகோரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் கோபி நன்றி கூறினார்.


Next Story