இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது எடப்பாடி பழனிசாமி பேச்சு


இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 May 2018 4:30 AM IST (Updated: 13 May 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று ஏற்காடு கோடை விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு 43-வது கோடைவிழா-மலர்கண்காட்சி தொடக்க விழா ஏற்காடு கலையரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை தொடங்கி வைத்து, ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், “கூட்டுப் பண்ணையத் திட்டம்” என்ற முன்னோடித் திட்டம் மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுக்களுக்கு அறுவடை எந்திரங்கள், 747 டிராக்டர்கள், 1,849 பவர் டிரில்லர்கள், 1,369 களையெடுக்கும் எந்திரங்கள், 783 சுழற்கலப்பைகள், 666 புதர் வெட்டும் கருவிகள் மற்றும் 3,412 இதர பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டு, 1 லட்சத்து 98 ஆயிரத்து 800 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இதன் மூலமாக வேளாண் உற்பத்தி பெருகும். அதற்காகத்தான் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து முதலாவதாக இருந்து தமிழ்நாடு கிரிஷ் கர்மாண் விருதை பெற்று வருகின்றது. இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த 803 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 லட்சம் ஏக்கர் பரப்பில் 4 ஆண்டுகளில் மானாவாரி நிலங்களை தொகுப்பாக மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் நடப்பாண்டில் 10 லட்சம் ஏக்கர் பரப்பில் விரிவுபடுத்தப்படும். விவசாய தொழிலாளர்கள் 65 சதவீத பேர் வேளாண்மையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி நன்மைகளை செய்வதுதான் அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் 20 மாவட்டங்கள் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் அடிப்படை தேவைகளான, சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். நான் தனியே எந்த முடிவும் எடுக்காமல், ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்தினால் சிறக்கும் என்று மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசி, முடிவெடுத்துதான் அந்த திட்டத்தை நான் அறிவிக்கின்றேன். பலரோடு பேசுகின்ற போதுதான் அந்தத் திட்டம் சிறக்கும். ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். அவற்றை உள்வாங்கி, ஒருமித்த கருத்தோடு, திட்டத்தை வகுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதன்படி அரசு இன்றைக்கு வெற்றி நடை போடுகிறது.இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

முடிவில், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். முன்னதாக விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தங்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினர். 

Next Story