மாவட்ட செய்திகள்

ஊட்டியில் கண்காட்சி: 25 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட இந்தியா கேட் + "||" + Exhibition in the feed Giant India Gate created by 25 thousand rose flowers

ஊட்டியில் கண்காட்சி: 25 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட இந்தியா கேட்

ஊட்டியில் கண்காட்சி: 25 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட இந்தியா கேட்
ஊட்டியில் தொடங்கிய கண்காட்சியில் 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரமாண்ட இந்தியா கேட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத் தப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., கோபாலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், துணை இயக்குனர் உமாராணி, ஆவின் இணைய தலைவர் மில்லர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரோஜா கண்காட்சியில் இந்திய தலைநகரமான டெல்லியில் அமைந்து உள்ள இந்தியா கேட் போன்று (இந்திய நுழைவு வாயில்) 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 12 அடி நீளம், 16 அடி உயரத்தில் கம்பீரமாக தோற்றமளித்தது. அதன் முன்பு ராணுவ பாதுகாப்பு குறித்த படம் இருந்தது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்கள் கண்களை கவரும் வகையில் அமைந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அதற்கு முன் நின்று தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் நிகழ்ச்சியில் இடம்பெறும் சோட்டா பீம் 5 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் சோட்டா பீம்மை ஆர்வமுடன் பார்த்தனர். பூங்காவின் முன்பகுதியில் ரோஜா இதழ்களை கொண்டு ட்வீட்டி ரங்கோலி அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோஜா பூங்காவுக்குள் நுழைந்ததுமே சுற்றுலா பயணிகளின் மனதில் இந்த ரங்கோலி பிரமிப்பை ஏற்படுத்தியது. ரோஜா கண்காட்சியை காண பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுதவிர மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், 6 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஜல்லிக்கட்டு காளை, ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 6 ஆயிரம் ரோஜா மலர்களால் மயில், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மலர்களை கொண்டு படகு ஆகியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த படகில் காய்கறிகள், பழங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், ரோஜா மலர்களால் ஆன ரோஜா மாலை, ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி ரோஜா அல்வா காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கண்காட்சியில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் கோப்பைகள், மரத்தொட்டிகளிலும் ரோஜா மலர்களை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. மாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த ரோஜா மலர்கள் மற்றும் சிறந்த தனியார் பூங்காக்களுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சியையொட்டி பூங்கா வளாகத்தில் உள்ள நிலாமாடத்தில் சிறுவர்களின் நடனம், உள்ளூர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.