கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய உரிமையாளர்கள்


கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய உரிமையாளர்கள்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 7:19 PM GMT)

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்காததால் திருவாரூர் அருகே சாலை அமைக்கும் பணியை நிலத்தின் உரிமையாளர்கள் தடுத்து நிறுத்தினர். பொக்லின் எந்திரம் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங் களும் பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நெரிசலை கட்டுபடுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரை வட்ட சாலை அமைப்பது என தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு திட்டமிட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருவாரூர் அருகே காட்டூர் என்ற இடத்தில் அரை வட்ட புறவழிச்சாலை அமைப்பதற்கான பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அப்போது சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான பணத்தை அரசு வழங்கவில்லை என கூறி நிலத்தின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் பொக்லின் எந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய தொகை வழங்க வேண்டும்

அப்போது அவர்கள் கூறுகையில், அரை வட்ட புறவழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகையை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பயனுமில்லை. இதனால் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. உரிய தொகை வழங்கினால் மட்டுமே சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதிப்போம் என தெரிவித்தனர். 

Next Story