துப்பாக்கி முனையில் வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது


துப்பாக்கி முனையில் வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2018 4:45 AM IST (Updated: 13 May 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

மன்னார்குடி பகுதியில் முதல் முறையாக துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் கொள்ளை நடந்த வங்கிக்கு மன்னார்்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இவர்களை தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரும் வங்கிக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், துப்பாக்கி, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷத்தில் உள்ள மெர்க்கன்டைல் வங்கியில் கடந்த 7-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக போலீசார் துரிதமாக செயல்பட்டு இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 துப்பாக்கிகள், ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மணப்பாறையில் உள்ள மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்றிய கடைநிலை ஊழியர் மரியசெல்வம்(வயது 35). இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

அவருடன், சுடலைமணி, மீரான்மைதீன், முத்துக்குமார் மற்றும் 2 பேரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பணத்தாசை, கெட்ட சேர்க்கை ஆகியவை காரணமாக இருந்துள்ளது. மரியசெல்வம், தான் வேலை பார்த்த வங்கியிலே அதிகமான அளவு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அங்கு சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அந்த திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார். அதன் பிறகு இந்த மாதம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மரியசெல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 5-ந் தேதி மரியசெல்வம் தனது கூட்டாளிகளுடன் மன்னார்குடி அசேஷம் வந்துள்ளார். அங்கு வங்கியின் சூழ்நிலைகளை அறிந்தும், வங்கி அமைப்புகள் குறித்து வரைபடம் தயாரித்து கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அனைவரும் தீவிரமாக கொள்ளை சம்பவம் குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து 6-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து 2 கார்களில் புறப்பட்டு மதுரை, திருச்சி வழியாக மன்னார்குடி வந்துள்ளனர். 7-ந் தேதி காலை வங்கி வந்தவர்கள் வரைவோலை(டி.டி.) எடுப்பதற்காக வங்கி மேலாளர் கோவிந்தராஜை அணுகியுள்ளனர். ஆனால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே வரைவோலை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது வங்கியை அவர்கள் முழுமையாக நோட்மிட்டு விட்டு புறப்பட்டு சென்று விட்டனர். மீண்டும் மதியம் 2 மணிக்கு வாடிக்கையாளர்கள் இல்லாத நேரம் பார்்த்து வங்கிக்கு மீண்டும் வந்த 5 பேரும் நேரடியாக வங்கி மேலாளர் கோவிந்தராஜிடம் சென்று தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர்.

ஒருவர் கேட்டை கண்காணித்துள்ளார். மற்றொருவர் கேமராவின் மூலம் பதிவாகும் தடயங்களை அழிப்பதற்காக மேலாளர் அறையில் இருந்த டி.வி.ஆர் என்கிற கேமரா பதிவு கருவியை கைப்பற்றியுள்ளார். மேலும் வங்கி மேலாளர் உள்பட ஊழியர்களின் செல்போன்களை பறித்துள்ளனர். இந்த நிலையில் வங்கி காசாளர் தியாகராஜன் என்பவரிடம் பாதுகாப்பு அறை சாவியை கேட்டுள்ளனர். அவரிடம் ஒரு சாவி மட்டுமே இருந்துள்ளது.

மற்றொரு சாவி வங்கி எழுத்தர் கோடீஸ்வரன் என்பவரிடம் இருந்துள்ளது. அவர் மதியம் சாப்பிடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அவர் வங்கிக்கு வரும் வரை பொறுமையாக கொள்ளையர்கள் காத்து இருந்தனர். அப்போது வங்கி ஊழியரை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் தரையில் சுட்டுள்ளனர்.

அப்போது வங்கிக்கு வந்த கூரியர் நிறுவனத்தின் ஊழியரையும், வங்கி ஊழியர்களுடன் சேர்த்து பெட்டக அறையில் அடைத்து பூட்டி விட்டு வங்கி காசாளரிடம் இருந்த ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் வந்த கார்களில் ஏறி தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அன்று மாலை 3 மணிக்கு வங்கிக்கு வந்த மேலும் வங்கியின் கடைநிலை ஊழியர் பாதமுத்து என்பவர் பெட்டக அறையை திறந்து வங்கி மேலாளர் உள்பட அனைவரையும் விடுவித்துள்ளளார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் கேமராவின் மூலம் வீடியோ பதிவுகளை எடுத்து சென்று விட்டனர். மேலும் அனைவரும் கையுறை அணிந்து இருந்தனர். இதனால் கைரேகைகள் பதிவுகள் கிடைக்கவில்லை.

இருந்தபோதிலும் மன்னார்குடி நகரத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி அவைகளை முழுமையாக ஆய்வு செய்தனர். இதில் கிடைத்த சில படங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(27), சுல்தான் மகன் மீரான் மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வத்தை கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் ஒன்று நாட்டு துப்பாக்கி, மற்றொன்று போலி துப்பாக்கியாகும். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story