ரூ.15 லட்சம் கேட்டு லாரி அதிபர் கடத்தல் சொகுசு காருடன் 5 பேர் கும்பல் கைது


ரூ.15 லட்சம் கேட்டு லாரி அதிபர் கடத்தல் சொகுசு காருடன் 5 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 13 May 2018 4:45 AM IST (Updated: 13 May 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.15 லட்சம் கேட்டு லாரி அதிபர் கடத்தப்பட்டார். சொகுசு காருடன் 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி மாநகரில் தினமும் வழிப்பறி, பணம் கேட்டு மிரட்டல், ஓடும் பஸ்சில் ஜேப்படி என தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதை தடுக்கும் நோக்கத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டை பகுதியில் சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்தது. போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். காரின் பின்னால், போலீசார் கண்காணித்தபடி வருவதை காரில் இருந்தவர்கள் கண்டனர். அதைத்தொடர்ந்து காரின் வேகத்தை அதிகரிக்க தொடங்கினர். போலீசாரும் விடாது துரத்தி காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் 6 பேர் கும்பல் இருந்ததை கண்டு, விசாரித்தனர். விசாரணையில், அது ஆள்கடத்தல் கும்பல் என தெரிந்ததும் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது காரில் இருந்து இறங்கியவர்களில் பன்னீர்செல்வம் என்பவர் பதறியடித்தபடி வந்து, “சார்... என்னைத்தான் 5 பேர் கும்பலும் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தி வந்து ஒருநாள் முழுவதும் காரிலே சுற்றினர்” என்றார். பன்னீர்செல்வம் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர். இவர் கழிவு நீர் ஏற்றி செல்லும் லாரிகள் வைத்து தொழில் நடத்தி வருவதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அக்கும்பலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் சென்னை அண்ணாநகரை சேர்ந்த செல்வம், திருச்சியை சேர்ந்த கணபதி, கலைச்செல்வன், பெரம்பலூர் இளவரசன் மற்றும் சேலம் ராஜ்குமார் ஆகியோர் ஆவர்.

போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

சென்னையை சேர்ந்த செல்வத்துக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு கணபதி மற்றும் கலைச்செல்வன் பழக்கமானார்கள். இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். அவர்களது கார்களை தனியார் வாடகை கார் நிறுவனத்தில் இணைத்து விடுவதாக கூறி கணபதியிடம் இருந்து ரூ.70 ஆயிரம், கலைச்செல்வனிடம் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை செல்வம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், சொன்னபடி தனியார் வாடகை கார் நிறுவனத்தில் அவர்களது கார்களை செல்வம் இணைக்கவில்லை. அதைத்தொடர்ந்து இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு செல்வத்தை தொந்தரவு செய்ய தொடங்கினர்.

அப்போதுதான், திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த லாரி அதிபர் பன்னீர்செல்வம் வசதியாக இருப்பதையும், சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை அவர் வாங்கியதையும் செல்வம் அறிந்தார். எனவே, உனக்கு பணம் வேண்டுமானால், பன்னீர்செல்வத்தை கடத்தி மிரட்டினால் கொடுத்து விடுவான். எனவே, அதற்கு நீங்கள் உதவினால், கிடைக்கக்கூடிய தொகையை சரிசமமாக பங்கிட்டு கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

அதற்கு ஒப்புக்கொண்ட கலைச்செல்வன் பெரம்பலூரில் வாகன ஷோரூமில் வேலைபார்க்கும் இளவரசனையும் சேர்த்து கொண்டார். அதே வேளையில் கலைச்செல்வன், சேலத்தில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராக வேலைபார்க்கும் ராஜ்குமார் என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ராஜ்குமார் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், ஆள்கடத்தல் வேலைக்கு ராஜ்குமாரையும் பங்குதாரராக சேர்த்து, கூடுதல் பணம் கிடைக்கும் எனவும் கலைச்செல்வன் கூறி இருக்கிறார். இதன் மூலம் ஆள் கடத்தல் சதி திட்டத்துக்கு 5 பேர் கூட்டணி சேர்ந்தாகி விட்டது.

அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் பகலில் திருச்சியில் முக்கிய இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி அதிபர் பன்னீர்செல்வத்தை 5 பேர் கும்பல் சொகுசு காரில் கடத்தினர். பின்னர் அவரிடம், குறுகிய காலத்தில் எப்படி வசதி வந்தது? என கேட்டதுடன், “உன்னை நாங்கள் கடத்தி கொண்டு போகிறோம். ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம்” எனக்கூறி இருக்கிறார்கள். அதற்கு பன்னீர்செல்வம், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என மறுத்துள்ளார்.

பின்னர் திருச்சியின் பல்வேறு இடங்களில் சொகுசு காரில், கடத்தப்பட்ட பன்னீர்செல்வத்துடன் 5 பேர் கும்பல் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போதுதான் போலீசாரின் பார்வையில் பட்டு, 5 பேரும் சிக்கி கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் நடந்த ஆள் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story