கொட்டி தீர்த்த கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆண்டிப்பட்டியில் பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாத சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவில் தேனி உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று பிற்பகலில் தேனி, போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அவைற்றை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி ஆண்டிப்பட்டி, கண்டமனூர், க.விலக்கு, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை நேற்று பெய்தது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இந்த மழையினால், ஆண்டிப்பட்டியில் மதுரை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆண்டிப்பட்டி நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தப்படி ஊர்ந்து சென்றன. மழை பெய்யும் போது, சூறாவளிக்காற்று வீசியதால் முருங்கை மரங்களில் இருந்த பூக்கள், காய்கள் உதிர்ந்தன. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிப்பட்டி பகுதியில், பெய்து வரும் தொடர்மழையினால் குளிர்ந்த வானிலையே நிலவுகிறது.
Related Tags :
Next Story