மத்திய அரசை கண்டித்து கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நாகையில் நாளை நடக்கிறது


மத்திய அரசை கண்டித்து கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நாகையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 6:54 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடக்கிறது.

நாகப்பட்டினம்,

நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர். 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது விவசாய சங்கத்தை சேர்ந்த கார்மேகம், ராமசாமி, தமிழ்செல்வன் உள்பட பலர் இருந்தனர். 

Next Story