தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து 23–ந் தேதி ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து 23–ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 3:45 AM IST (Updated: 14 May 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து வருகிற 23–ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.பி. கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர்கள் ரவி, வஹிதா நிஜாம், லட்சுமணன், காசி விஸ்வநாதன், பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

மத்திய அரசு நிலையாணை விதிகளில் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வேலை என்ற திருத்தத்தை சேர்த்து உள்ளது. அதன்படி ஒரு தொழிலாளியை வேலைக்கு நியமனம் செய்யும்போதே எவ்வளவு காலத்துக்கு அவர் வேலையில் இருப்பார் என்று குறிப்பிட்டு உத்தரவு அளிக்கலாம். அந்த காலம் முடிந்ததும் அவர் தானாகவே வேலையை இழந்து விடுவார்.

மேலும் இடைப்பட்ட காலத்திலும் ஏன் வேலையை விட்டு விலக்குகிறோம் என்று ஒரு விளக்க கடிதத்தை அவர் கையில் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடலாம். இதுதொழிலாளர்கள் 100 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமைகளை ஒரே திருத்தத்தின் மூலம் பறிப்பதாகும்.

எனவே இந்த திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை மாநில விதிகளில் தமிழக அரசு மேற்கொள்ள கூடாது. அந்த திருத்தத்தை எதிர்த்து ஒன்றுபட்ட சமரசமற்ற போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து வருகிற 23–ந் தேதி(புதன்கிழமை) தொழிற்சங்கங்கள், மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரையும் இணைத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்படியான முத்தரப்பு குழுக்கள் எதையும் கடந்த 2 ஆண்டுகளாக கூட்டவில்லை. மாநில தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பித்து ஒரு ஆண்டு ஆகியும் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக தொழிலாளர் நலவாரிய கூட்டங்களை நடத்த வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story