போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் குட்கா ஆலை அதிபர் டெல்லியில் 15 நாள் தேடுதல் வேட்டை நடத்தியும் கைது செய்ய முடியவில்லை


போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் குட்கா ஆலை அதிபர் டெல்லியில் 15 நாள் தேடுதல் வேட்டை நடத்தியும் கைது செய்ய முடியவில்லை
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:21 PM GMT)

டெல்லியில் கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் குட்கா ஆலை அதிபர்: போலீசாரிடம் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

கோவை,

கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலை மேலாளர் ரகுராமன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 38) தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக போலீசார் விசாரணை நடத்திய போது டெல்லியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 28–ந் தேதி தனிப்படை டெல்லிக்கு விரைந்தது. தனிப்படை டெல்லி சென்று 15 நாள் ஆகியும் அமித்ஜெயினை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

இதற்கிடையில் அமித்ஜெயினின் செல்போன் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் செல்போனில் கடைசியாக யார்–யாரிடம் பேசினார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அமித்ஜெயின் தமிழகம் மட்டுமல்லாது மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொழில் செய்து வருகிறார். எனவே அவர் டெல்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலருடனும் தொடர்பு உள்ளது. அவர்களிடம் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அமித்ஜெயினின் நண்பர்களிடம் நடத்திய விசாரணை யில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவரை கைது செய்வதற்காக டெல்லி போலீசாரின் உதவியையும் கோவை மாவட்ட போலீசார் நாடி உள்ளனர்.

குட்கா ஆலையில் இருந்து உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார்–யார்? அவர்கள் குட்கா ஆலைக்கு எந்தெந்த வகையில் உதவி செய்தார்கள்? என தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமித்ஜெயினை கைது செய்தால் குட்கா ஆலை வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமித்ஜெயினை பிடிப்பதற்காக டெல்லிக்கு கூடுதலாக ஒரு தனிப்படை யை அனுப்ப போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

குட்கா ஆலை செயல்பட உதவியதாக கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான தளபதி முருகேசனை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குட்கா ஆலை அதிபர் இன்னும் கைதாகாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story