மனைவி பிரிந்ததால் வேதனை: அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த போலீஸ்காரர் சாவு
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த போலீஸ்காரர் பரிதாபமாகச் செத்தார்.
பாகூர்,
கடலூர் புதுக்குப்பம் நேரு நகரைச் சேர்ந்தவர் அற்புத ஏசுபாலன் (வயது 35), இவர் தமிழக அரசின் போலீஸ்துறையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரிதா பிரபா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
போலீஸ்காரர் அற்புதராஜனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அற்புத ஏசுபாலனை அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அற்புத ஏசுபாலன், அளவுக்கு அதிகமாக மதுகுடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அற்புத ஏசுபாலன் கடலூர் அருகே உள்ள புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு வந்தார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்தார். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் அவரால் வீட்டுக்கு செல்லமுடியவில்லை. அதனால் சாராயக்கடை அருகே படுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாகச் செத்தார்.
நீண்டநேரமாக அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை ஆரோக்கியசாமி மகனை பல இடங்களில் தேடிவிட்டு ஆராய்ச்சிக்குப்பம் சாராயக்கடைக்கு வந்தார். அங்கு மகன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புகாரின்பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரர் அற்புத ஏசுபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.