கோடை விழா- மலர் கண்காட்சி: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விழா- மலர் கண்காட்சி: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 8:50 PM GMT)

ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழா- மலர் கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை காலத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 43-வது கோடைவிழா-மலர் கண்காட்சி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த கோடை விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட பல வகையான வண்ண, வண்ண பூக்களுடன் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு மலர்களால் விமானம், தலைமை செயலகம், கிரிக்கெட் வீரர், டிராக்டர், நடன மங்கை மற்றும் கார்ட்டூன் உருவங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காய்கறிகளால் மயில், பிள்ளையார், மீன், தெர்மாகோலில் அன்னபூரணி, பாதுகாவலர், பேரீட்சம்பழத்தில் டிராகன், வெண்ணையால் முயல், குரங்கு, நாய் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது. அண்ணா பூங்காவை நேற்று முன்தினமும் ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் 2-வது நாளான நேற்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்காவிற்குள் சென்று அங்கு வண்ண பூக்களையும், அதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உருவங்களையும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக வண்ண பூக்கள் அருகேயும், உருவங்கள் முன்பும் குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிகமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி வாகன ஓட்டிகள் பலர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் பலர் ஏற்காடு படகு முகாமிற்கு சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் படகில் ஜாலியாக சவாரி செய்தனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர மான் பூங்கா, பக்கோடா பாயின்ட், சேர்வராயன்ஸ் மலைக்கோவில், தலைச்சோலை, கிளியூர் வீழ்ச்சி, ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடீஸ் பாயிண்ட் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வாகன ஓட்டிகளை அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.8½ லட்சம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திற்கு டிக்கெட் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.15-ம், பெரியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன. மான் பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது.


Next Story