மதம் மாற்ற முயற்சிப்பதாக கூறி இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்
ஓமலூர் அருகே மதம் மாற்ற முயற்சிப்பதாக கூறி இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி காட்டூர் பகுதி. இப்பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி மற்றும் விவசாயம் செய்து வருகிறார்கள். இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கிறிஸ்தவர்கள் சிலர் ஜெபகூட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது.
மேலும் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மத மாற்றம் செய்வதாக இந்து முன்னணியினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வெங்கடேஷ், செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றனர்.
முற்றுகைபின்னர் அவர்கள் ஜெபகூட்டம் நடைபெற்ற அந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் முற்றுகையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.