பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேர் கைது


பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2018 3:45 AM IST (Updated: 14 May 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி அருகே அரவக்குறிச்சி– கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். இவர் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வரவு– செலவு கணக்கு பார்த்துவிட்டு கரூரில் உள்ள உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 100–ஐ கொடுப்பதற்காக புறப்பட்டார். அப்போது மலைக்கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சுப்ரமணியத்திடம் அந்த பணத்தை பறித்து விட்டு தப்பிவிட்டனர். அப்போது அதில் ஒருவரது செல்போன் கீழே விழுந்தது. இது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுப்ரமணியன் புகார் அளித்து அந்த செல்போனையும் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மும்முரம் காட்டினர்.

3 பேர் கைது

வழிப்பறி கொள்ளையன் தவறவிட்ட செல்போனில் வரும் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெட்ரோல் பங்கிலேயே தற்காலிகமாக வேலை செய்யும் அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் கவியரசு(வயது 23), மேற்படி அந்த பங்கில் முன்பு வேலை பார்த்த திருச்சி தொட்டியம் தாலுகா சீலைபிள்ளையார்புதூர் பகுதியை சேர்ந்த செல்லாண்டி மகன் கிருஷ்ணமூர்த்தி(21) ஆகியோரது ஆலோசனைப்படி கரூர் அருகே உள்ள ராமானூரை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சூர்யா(22) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து பணத்தை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கவியரசு, கிருஷ்ணமூர்த்தி, சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, வழிப்பறி செய்யப்பட்ட பணம் மற்றும் 3 செல்போன்கள், ஒரு கத்தி, 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வழிப்பறி சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.


Next Story