தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா, வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட ஆண்டு விழா ஆகிய விழாக்கள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. போர்ட்டு உயர்நிலை பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கூடம் 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. என்னை உருவாக்கி உங்கள் முன் நிறுத்தியிருப்பது இந்த பள்ளி தான். நான் படித்த பள்ளி இது. 1967-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. வரை இங்கு படித்தேன். அப்போது இந்த பள்ளி மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்தது. பள்ளியின் அருகே இருந்த விடுதியில் தங்கி படித்தேன்.
நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது, ஈரோடு எம்.எல்.ஏ.வாக இருந்த மாணிக்கம் எஸ்.எஸ்.எல்.சி. படித்து கொண்டு இருந்தார். 6 ஆண்டுகள் நான் இங்கே தான் இருந்தேன். அப்போது உடற்கல்வி ஆசிரியராக முத்துசாமி இருந்தார். அது ஒரு பொற்காலம். இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து ஏராளமான அறிவாளிகள் உருவாக்கப்பட்டார்கள்.
சிறந்த ஆசிரியர்கள் பெருமக்கள் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். அதையெல்லாம் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்து முதல்-அமைச்சராக உருவாகி இருக்கிறேன் என்றால் அந்த பெருமை இந்த பள்ளிக்கூடத்தை சாரும்.
இப்போதும் இந்த பள்ளிக்கூடம் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வருகிறது. கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது உங்கள் மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்து, ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் செயல்படுகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 221 புதிய அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்கள், அவர்கள் வாழும் பகுதியிலேயே தொடக்க கல்வியை பெறும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய பள்ளிக்கூடங்களை திறந்தார். இதுபோல 112 தொடக்கப்பள்ளிக்கூடங்கள் நடுநிலை பள்ளிக்கூடங்களாக தரம் உயர்த்தப்பட்டன. 810 நடுநிலை பள்ளிக்கூடங்கள், உயர்நிலை பள்ளிக்கூடங்களாகவும், 402 உயர்நிலை பள்ளிக்கூடங்கள் மேல்நிலை பள்ளிக்கூடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
இதனால் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜெயலலிதாவின் நடவடிக்கையால் உயர்கல்வி அளிக்கும் அதிக பள்ளிகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது அவரது வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 6 புதிய தொடக்க பள்ளிக்கூடங்கள், 4 தொடக்க பள்ளிக்கூடங்கள் நடுநிலை பள்ளிக்கூடங்களாகவும், 169 நடுநிலை பள்ளிக்கூடங்கள் உயர்நிலை பள்ளிக்கூடங்களாகவும், 102 உயர்நிலை பள்ளிக்கூடங்கள் மேல்நிலை பள்ளிக்கூடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
மேலும், மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையை உருவாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2011-2016 ஆண்டுகள் வரை 58 ஆயிரத்து 691 காலிப்பணியிடங்களில் ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, கிராமத்து மாணவர்கள் காலையில் சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் செல்லவும், மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்ப வசதியாகவும் சைக்கிள்கள், கற்றலை எளிதாக இணையதளம் மூலம் கல்வி பயில வசதியாக 36 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த நேரத்தில் ஒரு சிறிய கதை கூற விரும்புகிறேன். இளைஞர் ஒருவர் குருவிடம் பயிற்சி பெறுவதற்காக சென்றார். அந்த இளைஞரிடம் குருவானவர் நான் உனக்கு சொல்லி தந்து நீ பயிற்சி பெறுவதைவிட உனது அனுபவத்தில் புரிந்து கொள்வது மிகவும் நல்லது என்றார். அந்த இளைஞரும் குருவிடம் உங்களை பார்த்து பின்பற்றி விரைவில் தெரிந்துகொள்வேன் குருவே என்றார். தொடர்ந்து குருவை பின்பற்றி வந்தார். குருவின் செயல்கள் அனைத்தையும் அப்படியே பின்பற்றவும் ஆரம்பித்தார். அதை குருவிடம் கூறிய இளைஞரிடம் குருவானவர், என்னை அப்படியே பின்பற்றினால் அது மிகவும் தவறு, அதையும் விரைவில் தெரிந்துகொள்வாய் என்றார்.
ஒருநாள் குரு தியானம் செய்து முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்து மறுகரையை அடைந்தார். அதைப்பார்த்த இளைஞருக்கு ஆற்றில் நடக்க ஆசை ஏற்பட்டது. அவரும் குருவைப்போல் தியானம் செய்தால் ஆற்றில் நடக்கலாம் என்று நினைத்து, தியானம் செய்தார். தியானத்தை முடித்துவிட்டு ஆற்றில் கால் வைத்த மறுநிமிடம் தண்ணீர் அவரை அடித்து சென்றது. அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் குருவே என்று குரல் கொடுத்தார். குருவும் அதை கேட்டு அவரை காப்பாற்றினார்.
அப்போது அந்த இளைஞர் நீங்கள் ஆற்று தண்ணீரில் நடந்து சென்றீர்கள், ஆனால் உங்களை பின்பற்றிய என்னால் நடக்க முடியவில்லை ஏன் என்று கேட்டார். அதற்கு குரு ஆற்றில் கால் வைத்து நடக்க எந்தந்த இடத்தில் கல் புதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு நடக்க வேண்டும். கண்மூடித்தனமாக என்னை பின்பற்றியது தவறு. சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இதேபோல இளைஞர்கள் யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், பலபேர் ஏதேதோ பேசி கொண்டு இருக்கிறார்கள். அது யார்? யார்? என்பது உங்களுக்கு தெரியும்.
எனவே இளைஞர்கள் நன்றாக தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள். அப்போதுதான் நினைத்தது போன்ற வெற்றி கிடைக்கும்.
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் 703 பணிகள் எடுக்கப்பட்டு ரூ.637 கோடி செலவில் 1,590 கிலோ மீட்டர் ரோடு போடப்பட்டு உள்ளது. இதில் ரூ.79 கோடி செலவில் 77 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.
2016 முதல் 2018-ம் ஆண்டு வரை 454 பணி திட்டங்கள் எடுக்கப்பட்டு ரூ.332 கோடி செலவில் 978 கிலோ மீட்டர் ரோடு போடப்பட்டு உள்ளது. இதில் ரூ.115 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 16 பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
ஜெயலலிதா அறிவித்த திட்டமான ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் ரூ.64 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் விரிவாக்கம் செய்வதற்காக பணிகள் விரைவில் நடத்தப்படும்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து தொப்பூர் வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 45 மீட்டர் அகலம் கொண்ட சாலையாக உருவாக்கப்படும்.
மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம், சத்தியமங்கலம்-சித்தோடு, சத்தியமங்கலம்-அத்தாணி- பவானி, ஈரோடு-கரூர் ஆகிய ரோடுகள் 4 வழிச்சாலையாக உருவாக்கப்பட உள்ளன.
இதேபோல் ஈரோடு-திருச்செங்கோடு 4 வழிச்சாலை உருவாக்கும் திட்டமும் உள்ளது. முக்கிய சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாறும்போது விபத்துகள் குறையும். பயண நேரமும் குறையும்.
குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 65 சதவீதம் மக்கள் விவசாயப்பணி செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயத்துக்கு நீர் முக்கியம். இந்த நீர் இருந்தால்தான் விவசாயிகளும், வேளாண்மையும் நன்றாக இருக்கும். எனவே கடந்த ஆண்டு 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டது.
இந்த ஆண்டில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளில் நீர் வரத்து கால்வாய், கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஆழப்படுத்துதல், உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சரிசெய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி குடிமராமத்து பணிக்கு செலவாகும் தொகை முழுவதும் அரசு அவர்களுக்கு வழங்கும். இதனால் எந்த தவறும் நடந்து விடாமல் பணிகள் நடைபெறும்.
இந்த பணிகள் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம், ஏரிகளில் தேங்கி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க 3 ஆண்டுகளுக்கான திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இந்த ஆண்டுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பற்றி யார், யாரோ பேசினார்கள். ஆனால் மத்திய அரசு அல்லது நபார்டு வங்கி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இருந்தாலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி மாநில அரசு முழுமையாக நிதி ஒதுக்கி அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
பவானி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. ஜமுக்காளம் உற்பத்தி சிறந்து விளங்குகிறது. இங்குள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுபோல் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு நெசவாளர்களை காப்பாற்றும் அரசாக ஜெயலலிதா அரசு செயல்படுகிறது.
பவானிக்கு புறவழிச்சாலை அமைக்கவும் பணிகள் நடந்து வருகிறது. கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறைக்கும், உயர்கல்வித்துறைக்கும் அதிக நிதி ஒதுக்கினார்.
ஒரு நாடு பொருளாதாரத்தில் உயர்வடைய கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஜெயலலிதா கல்வி புரட்சியை ஏற்படுத்தினார். அவருடைய வழியில் கல்வி புரட்சி ஏற்படுத்தும் வகையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 4 வகுப்புகளுக்கும், அடுத்து ஆண்டு 8 வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்படும். இந்திய அளவில் மிக சிறந்த கல்வியாக இது இருக்கும்.
எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும், அதை சந்திக்கும் ஆற்றலும், திறனும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும்.
வறட்சியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 247 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய மின் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. மின் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விபத்தில் சிக்கிய திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உயிரிழந்த ஒருவரின் கைகளை எடுத்து, அந்த தொழிலாளிக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்தனர். தற்போது தொழிலாளியின் கைகள் நல்ல நிலையில் உள்ளது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்த சாதனையை செய்து இருப்பது இந்திய அளவில் மிகப்பெரிய மைல் கல்லாக விளங்குகிறது.
தமிழகம் முழுவதும் 229 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், 120 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
எனவே கிராம மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே தரமான மருத்துவத்தை பெற்று வருகிறார்கள்.
தொலைநோக்கு சிந்தனையுடன் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அம்மா இருசக்கர வாகனங்களுக்காக 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வீதம் 3 ஆண்டுகளில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இதில் மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நான் படித்த பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர். அந்த கோரிக்கைகள் இந்த அரசு நிறைவேற்றி தரும். இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட சிறப்பு பராமரிப்பு நிதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி தேவை என்று தெரிவித்தனர். அந்த தொகையை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Related Tags :
Next Story